பூக்கட்டும் புதுமைப் பூக்கள்
ஜனநாயகப் பித்தர்களுக்கு
தேர்தல் எனும் போதை மாத்திரை
புழக்கடைப் பாட்டிகளும்
புதுப் புதுக் கரன்சிகளுக்காய்
வாசல் திண்ணையில் படுக்கை
அனாதைகள் ஆதரவாளர்களானர்கள்
ஐந்தண்டுகள் தூங்கிக்கிடந்த கும்பகர்ணர்கள்
ஐஸ் வாட்டர் தெளித்து
அவசர அவசரமாய் எழுப்பப் பட்டனர்
அவர்களின் தூங்கா விரதம்
ஐம்பது நாட்களுக்கு மட்டுமே .
எனவே அணுகும் அத்துனை இலவசமும்
இவர்கள் தனதாக்க அவசரம் காட்டினர்
நடப்பவை புரியும் முன்னர்
இவர்களின் சுட்டு விரல்
மருதாணி இட்டுக் கொண்டது
காதைக் கிழிக்கும் கம்பீர ஒலி எடுத்து
கடமை முடிந்ததாய் எண்ணி
மீண்டும் தூங்கிடாதீர் என்றே
உரக்கக் கூச்சலிட்டபடி
ஒய்யாரமாய் மொட்டவிழ்ந்தது
ஜனநாயகப் பூ ஒன்று
ஆணையிட்டது என்னிடம்
எடுத்துச் செல் இன்முகத்தோடு
சூடிக் கொள்வாள் உன் தலைவி
விலையேதும் தரவேண்டாம்
வீதியிலும் எறிய வேண்டாம்
வேதனைகள் ஒதுக்கி வைத்து
சாதனைகள் புரிய வைப்பேன்
எடுத்துச் செல்இன்முகத்தோடு
அடுத்த தடுத்த
அற்புத கோஷங்கள் கேட்பீர்
நான் இலவசங்களில் உயர்ந்தவன்
எனக்கு நிகர் எதுவுமில்லை
என் பைத்தியத்திற்கு நானே மருந்து
நான் உமிழும் வெளிச்சத்தில்
விட்டில் பூச்சியாய்
வலம் வரும் வாக்குறுதிகள்
விடியும் முன் செத்துப் போகும்
என்றே
டம டம வென
கொட்டடித்தன அப்பூக்கள்
ஆதவன் மெல்லச் சிரிக்க
தேசமெனும் தோட்டமெங்கும்
கொத்து கொத்தாய்
ஜனநாயகப் பூக்கள் மலரக் கண்டேன்
அதன் நறுமணத்தில் முயங்கிப் போய்
என்றன் மார்பில் சரிந்தாள் தலைவியுமே
முகர்ந்து விட்டேன் வாசம் தன்னை
தொலைத்து விட்டேன் தூக்கமதை
ஆதவனும் குளிர்ந்து போனான்
அழகாய் காதலித்தேன்
எந்தனது தலைவியையும்
என்னுயிர் தேசத்தையும்
பாடிக் களிப்போம் சூடி மகிழ்வோம்
பூக்கிறது புதுமைப் பூக்கள்
பாரீர் பாரீர் .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment