" பூக்கட்டும் புதுமைப் பூக்கள் ! "
புறப்படத் தயாராகும் பூக்களே ! - உங்கள் பயணம்
மலர்மாலையில் தொடங்கவா ?- மலர்வளையத்தில் முடங்கவா ?
தினந்தோறும் தன்னிபோடும் செடிக் கணவனின்
மனங்கொள்ளும் வகையில் இதழ்விரிக்கும் மனைவிப் பூ !
இதழ்மலரும் ரோஜாவே !- நீ ஒரு - இலங்கைப் பெண்ணா ?
உன்னைச் சுற்றிலும் உருவானதுதானே ' முள்வேலி ' !
கடவுளர் சிலைகள் ஆன்மிகத்தின் தனிஉடைமை
சிலைமீது படர்தல் பூஜைப்பூக்களின் தனிஉரிமை !
பற்றைக் காட்டப் பலவழிகள் இருந்திடினும்
ஒற்றை ரோஜா மலர்கொடுத்து உவந்திடுவர் காதலர்கள் !
மண்ணில் புதைகின்ற விதைகள் எழுச்சியில்தான்
செடியில் பூக்கின்ற பூவும் புரட்சியாகும் !
புல்லாங் குழலுக்குள் புகுந்துவரும் காற்றேதான்
நல்லிசை தவழ்கின்ற சங்கீத ஊற்றேயாம் !
மட்டைகள் எல்லாம் செடிகளாய் மாறினால்
பந்துப்பூக்கள் ஆறு -நான்கென பறந்தோடி மலரும் !
பன்னிரண்டு ஆண்டுக்கொரு முறை குறிஞ்சிப்பூ மலரும்
பதின்மூன்றுக்குப் பிறகுதான் இங்கே ஆட்சிப்பூ மலரும் !
குமணன் என்றால் கொடைக்கெல்லாம் மேனிலை
' ரமணன் ' என்றால் தட்ப வெப்ப வானிலை !
இளமை இங்கு பூக்கலகப் பூக்கட்டும்
இளைஞர் நன்கு நாடுதனைக் காக்கட்டும் !
பூச்சூடும் பூவையரும் அணி திரளட்டும்
பூமிதனில் புத்துணர்வு நனி மிரளட்டும் !
இலக்கியப் பூ மணம்வீசும் சோலை ஆகட்டும்
கவிதைமயில் அதில் அழகு நடனம் ஆடட்டும் !
வாசமலர்க் கவிதையெல்லாம் சிந்து பாடட்டும்
' வாசல் ' மேடை வந்துநின்று ஒன்று கூடட்டும் !
புறப்படும் வாய்வழியே புலமைப் பாக்கள்
பூக்கட்டும் வாசலிலே புதுமைப் பூக்கள்
No comments:
Post a Comment