வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Monday, June 20, 2011

-தி.கண்ணன்

                எழுதுகோல்  எமது  செங்கோல்
                                                                                                                                                                                                                                                                                                                                                                                            
           எழுதுகோல்   செதுக்கிடும்   செங்கோல் ,  
            வள்ளுவனின்  விரலில்  வாழ்ந்த 
            கம்பனின்  கையில்  கவிபாடிய 
            ஆறாவது  அறிவில்  முகிழ்த்த - அந்த           
            ஆறாவது  விரல்  
            அலைக்கற்றைகளையும் , இனப்படுகொளைகளையும்   
           வரைந்தது -செங்கோல் தலை  கவிழ்ந்தது -அந்த  
           எழுதுகோல்  எமது செங்கோல் .    
          
           பனிப்பளிங்கினைச் சுமக்கும்  
           தண்ணீர்க்குடம்   சுமந்த கன்னி எனும்             
           புல்லினழகை  - எழுதும்
           எனது எழுதுகோல் எமது செங்கோல் . 

           குளத்து நீரில் , நிலவு தோசை சுடும்  
           தாமரை இதழை - எழுதும் .............
          
        கன்னிமலரிதழில்  மலரும் கனவுப்பூக்கள்போல்   
        காற்று விரல்களால் , மூங்கிலினுள்  ஊடாடி ,   
         புல்லாங்குழல் இசை  இசைக்கும்  
         ராகத்தை - எழுதும் ........... 
       
         கும்பிக்காய் கூழ்தேடி   வாடும்   
          குடிசைகளின்  வியர்வை  பேசும் - என்  
           எழுதுகோல்  எனது  செங்கோல் .  
                                          ------------தி.கண்ணன்




எமது செங்கோல்!

வெண்மைநிறத் தாளாம்எம் விரியும் நாட்டில்
.. வெவ்வேறு மாநிலமாய் விளங்கும் நூல்கள்!
கண்ணினமும் செவியினமும் கலந்து வாழும்
.. கலகமிலாப் பொன்நாடு காண்எம் நாடு!
வண்டுலவும் வழியெல்லாம் வழியும் தேன்போல்
.. வளர்ந்துவரும் திருநாட்டின் வழிக ளெல்லாம்
எண்ணமதைத் தேனாக்கி எழுதுங் கோலே
.. இந்நாட்டைக் காக்கின்ற எமது செங்கோல்! (1)

எழுதாத தாள்களெலாம் எமக்காய் வாழும்!
.. என்றெந்தன் கோல்பதியும் என்றே ஏங்கும்!
விழுதாயெம் எண்ணங்கள் விளங்கும் போதில்
.. விசித்திரமாய் உருமாறும், விலையும் போகும்;
பழுதாயும், கோல்நடந்த பரப்பை எல்லாம்
.. பத்திரமாய்க் காத்திருக்கும் பதிந்த தாள்கள்!
முழுதாய்எம் வாழ்க்கையெலாம் முடிந்த போதும்
.. முத்தான எழுத்துக்கு மூச்சாய் நிற்கும்! (2)

பார்வைமரம் தரும்செய்தி பறித்து வந்து
.. பக்குவமாய் அதைஅரைத்துப் பழகும் மூளைக் 
கூர்மைதரும் கருத்தெல்லாம் கூட்டி கூட்டிக்
.. குழைத்ததனில் மெய்சேர்த்துக் குழம்பாய் ஆக்கி
நேர்மையெனும் கலத்திலதை நிரப்பி வைத்து 
.. நிஜம்மெல்ல நகர்கின்ற நேரம் மையாய்ச்
சேர்த்தெழுத்தைத் தாள்பதித்து தேச மெல்லாம்
.. சேர்க்கின்ற பணிசெய்யும் தேர்ந்த செங்கோல்! (3)

ஏற்றங்கள் தடுமாறும் எங்கோ அங்கே
.. எழுதிஅதைச் சீர்படுத்தும் எங்கோல் செங்கோல்!
மாற்றங்கள் இன்றியுளம் மங்கும் அங்கும்
.. மணிதீபம் ஏற்றிவைக்கும் எங்கோல் செங்கோல்!
சாற்றுங்கால் மாதவனின் சங்காய் ஓங்கும்
.. சக்தியொலி எழுப்புகின்ற எங்கோல் செங்கோல்!
காற்றெங்கே அங்கெல்லாம் கங்காய்த் தங்கி
.. கருத்தையுளம் நிரப்புகின்ற எங்கோல் செங்கோல்! (4)

வெற்றிடத்தில் சிந்தைதரு வித்தை யிட்டு
.. வெள்ளாண்மை விளைவிளைக்கும் வித்தை செய்யும்;
விற்பனத்தை வேற்றார்க்கு வெள்ளைத் தாளில்
.. வெளியிட்டு விளையாடும் விரலின் நண்பன்;
சொற்றடத்தில் கண்பார்வை சொக்கச் செய்து
.. சொல்லுக்கோர் பொருள்கொடுக்கும்; சுவைக்கும் நெஞ்சின்
கற்பனைக்கு வடிகாலாய்க் காட்சி தன்னை
.. காகிதத்தில் கையெழுத்தாய்க் காட்டும் கோலே! (5)



--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com 

No comments:

Post a Comment