குறள் எடு குரல் கொடு
திரும்பத் திரும்பப் பாராயணம்
உரைகள் விளக்கும் உபன்யாசம்
அர்த்தம் உணராமல்
உள்ளம் விடுத்து
உதடுகளில் நாமாவளி
வேதங்களைப் போல
ஆகிப்போனது
திருக்குறள் வெறும் முணுமுணுப்பாக
சுவர்களில் , பேருந்துகளில்
பாடப்புத்தகங்களில்
அலுவலகங்களில் எங்கும்
சாமி படம்போல
வள்ளுவனும் அவன் குறளும்
பொருள் பற்றிச் சொன்னது
நினைவிருக்க -அவன்
அருள் பற்றிச்சொன்னது
மறந்து போனது
அரசு, அமைச்சு ,துறவு என்று
அத்தனைக்கும் இலக்கணம் சொன்னான்
ஆனால் இன்று
ஒன்றில் கூட உரியவருக்கு இடமில்லை
தமிழ் சாதிக்கான
வேதமாகிப் போனது
குறள் - அதில் உரைசொல்லக்
கற்றவன் பூசாரியாக
சடங்குகளோடு நின்றுபோனது
அவன் உரைகள்
பூசாரியின் பிள்ளை பூசாரியாக
அதிகாரம் மொழியாலே
நிறுவப்படுகிறது- நாம்
யாரும் அறியாமலேயே.....
மொழியின் மீது
சிம்மாசனம் செய்தவன்
படிக்கட்டுகளிலா குறள்
படிந்து கிடப்பது?
இன்னுமொரு கோட்டம் செய்வோம்
வள்ளுவனுக்கு - இந்தமுறை
மனத்துள்ளே.....
உணர்வுகளின் பெருக்காலே
உயர்ந்த தொரு சிலை காண்போம்
உள்ளத்துள்ளே
உரிமைகளுக்கான
சாவிகள்
குறள்கள் உள்ளே குவிந்து கிடக்கிறது
இன்றே
குறள் எடு குரல் கொடு
இல.சைலபதி
No comments:
Post a Comment