வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Thursday, December 29, 2011


புத்தாண்டு வாழ்த்துக்கள்


பத்தோடு பதினொன்றாய் போகாமல் 

வித்தாக விடியட்டும்  புத்தாண்டு !
முத்தான முயற்சியெல்லாம் வெற்றிபெற 
புத்துணர்வு தரட்டும் இப்புத்தாண்டு  !



  வாசல் வசந்தப்ரியனின் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் 

Monday, December 5, 2011

இல.சைலபதி கவிதை


பாரத விடியலில் பாரதி
  
  • பாரதி
    அடிமைச்சுமையைப் புரட்ட
    பாட்டு நெம்புகோல்
    எடுத்தவன்

    காலவெள்ளத்தில்
    மூழ்கிக்கொண்டிருந்த தமிழ்க்கவிதையை
    புதுவிசையோடு பாய்ந்து
    மீட்டெடுத்த முண்டாசுக்கவி

    நூற்றாண்டுப்புழுக்கத்தில்
    இருந்த
    பாரத மக்களுக்கு
    பாட்டு சன்னல்களைத் திறந்து
    சுதந்திரக்காற்றைச் சுவாசிக்கத் தந்தவன்

    பாரதி
    காந்தியின் மொழிபெயர்ப்பு
    நேதாஜியின் மறுபதிப்பு

      

    பாரதி
    அதுவரைக்
    கருவறைகளில் இருந்த
    கடவுளர்களைத் தன்
    கவியறைகளுக்குள் கொண்டுவந்தவன்

    அவன் திருப்பள்ளியெழுச்சி
    பாடியது
    தெய்வங்களுக்காக அல்ல
    பக்தர்களுக்காக

    அவனுக்கும்
    கண்ணனுக்கும் இடையே
    சாத்திரங்கள் இல்லை
    சங்கமம் இருந்தது

    அவனுக்கும்
    காளிக்கும் இடையே இருந்தது
    அச்சம் அல்ல
    அன்பு மட்டுமே

    பாரதி
    கடைசிவரைக்கும் தந்த
    கவிதைஅவலைத் தின்று விட்டு
    மாற்றுத்தராமல்
    மாதவனால் கைவிடப்பட்ட சுதாமன்

    காலத்தோடு சமரசம்
    செய்துகொள்ளத்தெரியாத
    அரை சமத்தன்

    வறுமை
    அவன் அமர்ந்திருந்த
    ஓட்டைப்பாயையும் உருவிக்கொண்டது
    அவனோ
    சாத்திரங்களைக் கலைத்துப்போட்டுத்
    தனக்குச்
    சிம்மாசனம் செய்துகொண்டான்

    கடவுளர்கள் மட்டுமா
    கைவிட்டது அவனை ? 

    தமிழ்ச் சமூகம்
    அவனுக்கு அன்று
    தர மறுத்த
    கௌரவம் குறித்த இன்றும்
    பரம்பரை பரம்பரையாய்
    குற்ற உணர்ச்சியோடு வாழ்கிறது


    அதற்குப் பரிகாரமாகத்தான்
    கவிதை
    என்று இன்று
    யார் என்ன எழுதினாலும்
    கவிஞன் என்று சொல்லி
    எழுந்து நின்று கைதட்டுகிறது

    எனக்கான
    கவிஞன் பட்டமும்
    பாரதியின் அவமானத்தில்
    பயிரானதுதான் 

    குருடர்கள்
    யானையைத் தடவிப்பார்த்துச்
    சொன்னது போலத்தான் பாரதியை
    பாரதம் அறிந்திருக்கிறது

    அறிவுக் கண்திறந்து பார்ப்போம்
    கவிதையானை ஒன்று காலங்கடந்து
    நமக்காகக் காத்துநிற்கிறது
    தன் திரண்ட நம்பிக்கையோடு 


Wednesday, November 9, 2011

இளசை கிருஷ்ணமூர்த்தி

மனம் கவர் மழலைகள் 

மழலைகள் ....
பாவத்தின் சம்பளமாய் 
வந்த 
பரிசுத்தம் !

செவி இனிக்கும் 
கன்னல் மொழி !
சிந்தை செப்பனிடும் 
வண்ணவிழி ...

சலனமற்ற 
மனம் ...........
ஆசைகளற்ற 
இதயம் !

மழலைகள் .....
முகமூடிகள் எதுவுமின்றி 
நிர்வாணத்தை 
அடையாய்ப்
போர்த்திக்கொண்டவர்கள் ....

சாதிப்பேய் 
சமயப்பித்து 
நிறபேதம் 
பணப்பைத்தியம் 
என்று 
எந்த அழுக்கும் 
படியாத 
சூரிய பிம்பங்கள் 
மழலைகள் ....

மாலையாய்க் கோர்க்கவேண்டிய
மலர்களை
மலர்வளையத்தில்
வைத்துத் 
தைப்பார்களா?

கண்திறக்கும் முன்னே 
கதைமுடித்தார்களே !
கொல்க்கொத்தாவில்.....

விதியா   அது 
விதிமீறல் செய்த 
சதி 

களங்கமில்லா நிலவுகள் 
கருவறைகோயில் வாழ்ந்த 
தெய்வங்களுக்கு 
கல்லறை தோட்டத்திலா
தொட்டில் கட்டுவது?

புதுயுகத்தின் பிரதிநிதிகளைப் 
பேணிக்காப்போம்

மழலைகள் 
மரணிக்காமல் 
வழிவகை செய்வோம் ! 

  


Sunday, October 2, 2011

மக்கள் மனதில் மகாத்மா - இல.சைலபதி

 
காந்தி
போர்பந்தரில் பிறந்த புத்தன்

மனதை மட்டுமல்ல
மக்களையும் வென்ற மகாவீரன்
சத்தியச்சிலுவையில்
தன்னைத்தானே அறைந்துகொண்டு
செத்த இயேசு

ஆயுதமேந்தாமலேயே
சுந்ததிரப்போரை நடத்திமுடித்த
பாரதச்சாரதி

பதவித்துண்டை
ஒரு நாளும் நாடாத
அரை நிர்வாணப்பக்கிரி

காந்தி...
ஆயுதங்களை ஏந்தி
அணிவகுத்தவர்களுக்கு முன்பு
அன்பை ஏந்தி
அமைதிப்போர் செய்தவன்

கொன்று குவித்தால்தான்
வெற்றி என்று
நினைத்த உலகத்திற்கு
அன்பால் வென்று
நிலைக்கக் கற்றுத்தந்தவன்

காந்தி
இந்திய அரசியலின் பொற்காலம்
மக்களுக்கு நல்ல தலைவர்கள்
கிடைத்திருந்த  நற்காலம்

அந்தக் காலத்து அகராதி
தலைமை என்பதற்கு
எளிமை என்று பொருள் சொன்னது


சாகும் போது சட்டைப்பையில் 
வெறும் அறுபது ரூபாயோடு
ஒரு மாபெரும்தலைவன்
மரித்துபோவதெல்லாம்
அந்தக் காலத்தின் அதிசயம்
 

காந்தியின்
கொள்கைக் கோவணத்தை
உருவித் தங்கள்
கட்சிகளுக்குக்
கொடிசெய்து கொண்டனர்
தற்காலத் தலைவர்கள்

ஊரெங்கும் அவருக்குச் சிலை
ஆனால்
ஒரு தலைவன் நெஞ்சில்கூட
அவருக்கு ஊசிமுனை இடம் இல்லை

மாளிகை வாசத்திற்குப்
பழக்கப்படுத்திக்கொண்ட
அம்பானிகளின் அடிவருடிகளுக்கு
அவர் ஆசிரமவாசமும்
அரிச்சந்திரபுராணமும்
அர்த்தமற்றவை

அவர்
நெஞ்சில் முதல்
குண்டு பாய்ந்தபோது
மண்ணில் ஊழல் விதை
விழுந்தது

இரண்டாவது
குண்டு பாய்ந்தபோது
பொதுநலம் மறந்த தலைமைகள்
பிறந்தது.

மூன்றாவது
குண்டு பாய்ந்தபோது
மதவாதம் ஒரு சாபமாகி
பாரத மண்ணின்
நீங்காத நிழலானது

காந்தி
உலகவரலாற்றில்  போட்ட
சத்தியத்தின் நெடுஞ்சாலை
யாரும் புழங்குவாரற்று
புழுதிபடிந்து கிடக்கிறது

வாருங்கள் நமக்கான
பயணங்களை அந்தச்
சத்தியச்சாலையில்
சமைத்துப்பார்ப்போம்













Sunday, September 4, 2011

கௌசிகா-



பாடங்கள் நடத்துவோரைப் பாடுங்கள்

ஓய்வு பெற்ற பின்னரும்
உயிருள்ள ஒரே பணி.

எலும்பு, தசைகளை உணர்வுகளாய்
மாற்றும் பணி.

ஏணியாய் சாய்ந்து நின்று
ஏற்றங்கள் தொலைத்த பணி

பக்தி, பாசம், பண்பு
இம் மூன்றின் இலக்கணம்
என் ஆசான்
அவர் புகழ் பாடுவோம்
அவர் திரு நாளிலே.

Monday, August 15, 2011

வாசல் வசந்தப்பிரியன் கவிதை

சிறகுகளின் சுதந்திரம் பறிபோனதால்
உறவுகளை விட்டுப்பிரிந்து
தனிமையில் கூண்டுக்கிளி

மலருக்கு மல்ர் தாவும் வண்டுக்குக்கூட
உறவுக்குக் கைகொடுப்பது
சுதந்திரச் சிறகுகள்தானே

சிறகுகள் சுதந்திரமாய் விரிவதால்
தொலைதூர வான் பயணம்
உறவுகளின் சந்திப்பு வேடந்தாங்களில்

வேடன் குறி தப்பவில்லை
சிறகுகள் செயலிழப்பு
பறவி உயிர் பறந்தது சுதந்திரமாய்

முதியோர் இல்லத்தில் தாய் பறவை
சேர்த்துவிட்டுப் பறந்தது சேய்ப்பறவை
உறவின் பிரிவுக்கு சுதந்திரச் சிறகுகளா?

சிறகடித்துப்பறந்தது
சமாதான வெண்புறா
வான்வெளிச் சுதந்திரம்

சிறகுகளின் சேதாரம்
அக்கினியிலிருந்து விடுபடமுடியா
ஃபீனிக்ஸ் பறவை

சங்கமித்தன உறவுகள்
விரிந்தன சுதந்திரச் சிறகுகள்
பறவைகளாய் மணமக்கள்

ஓங்கிநின்றது சகோதர பாசம்
இடையில் வந்தது சொத்துப்பிரச்சனை
சிறகடித்துப் பிரிந்தன உறவுகள்

உறவுகள் அனைத்தும் பறவைகளே
ஒருநாள் விரிக்கும் அவை
சுதந்திரச் சிறகுகளே

கன்னிக்கோயில் இராஜா கவிதை

சுதந்திரக்கொடி ஏற்றப்படுவதற்குமுன்பே
சுரண்டப்பட்டுவிட்டது இந்தியப்பொருளாதாரம்
தீவிரவாதம்,மதவாதம் கூடிப்போராடின
நட்புக்களின் கூட்டணியில்

சுதந்திரச்சிறகுகளில் முடுக்கப்பட்ட
அடிமை விலங்குகள் அனைத்தும்
மெல்ல மெல்ல விடுவிக்கப்பட்டன
பிறிதொரு நாளில்

தாத்தா காந்தி மாமா நேரு
போராட்டங்களுக்கு பின்னே
மிக நீண்ட வரிசையாய் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
சுதந்திரத் தியாகிகள் இன்று வரை

நம் உறவுகள் சுதந்திரச் சிறகுகளை
அறுத்தெந்த காலந்தொட்டு
இன்னமும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
சாலை சீரமைப்பு முதல் சமச்சீர்கல்வி வரை

கவிமாமணி வாசல் எழிலன்

                                                              உறவுகள் சுதந்திர சிறகுகள்                                               


சாதனையைச் செய்வதற்கும் உலக மெல்லாம் 
             சமத்துவமாய் ஆவதற்கும்  எழுந்து நிற்கும் 
வேதனைகள் இல்லாமல் போவ  தற்கும் 
             விடிவினையே எல்லோரும் உணர்வ தற்கும்          
நாதத்தை மீட்டிடவே முயறு கின்ற 
             நல்லோராய்  நாமெல்லாம்  ஆவதற்கும்
சீதனமாய் உறவுகளைப் பெருக்க வேண்டும்                         
              சிறகுகளாய்ச்    சுதந்திரமே  ஆதல் வேண்டும்  

புள்ளியினை வைத்துவிட்டால் கோலம் போடும் 
             புவியினிலே நாமெல்லாம் இருப்பதாலே 
வெல்லுகின்ற உள்ளத்தைக்  கூட்டு கின்ற 
             விடிவெள்ளி  போலிங்கே எழுவ தற்கும்                                            வல்லவரை  நாமெல்லாம்  ஆவ தற்கும்
              வழியினையே காட்டுவோராய் நிற்ப தற்கும்     
உள்ளங்கள் ஒன்றுபட்டு நிற்றல் வேண்டும்
               உறவுகளே சிறகாக  இருத்தல் வேண்டும்

சிந்தனைகள் செழிக்கின்ற சிறகி ருக்க 
               செந்தமிழாய் மனமெல்லாம்  சிறப்ப தற்கும்  
  பந்தமென எல்லோரும்  பழகு கின்ற
                 பக்குவமே எங்கெங்கும் இருப்ப தற்கும்
  விந்தையினைச்  செய்கின்ற சுதந்தி  ரத்தை
                 வியனுலகம் பெற்றிருக்க வேண்டு மய்யா !

 உறவுகளே  உள்ளத்தில் ஒளியாய் ஆக
          உண்மையினை எல்லோரும் உயர்வாய் ஆக்க
கரையில்லா நெஞ்சதனைக் காலமெல்லாம் 
         கலங்காமல் என்றென்றும் நிலைத்திருக்க 
நிறைவினையே பெற்றவராய் வாழ்திருக்க
         நேசத்தை எந்நாளும் நினைத்தி ருக்க
   உறவுகளே சிறகுகளாய் இருத்தல் வேண்டும்
           உறவெல்லாம் உயர்வினையே கொள்தல் வேண்டும்      

Saturday, August 13, 2011

கவிநயச் செல்வர் மன்னை பாசந்தி



கவிஞர் தி. கண்ணன்

சுதந்திரச் சிறகசைத்து 
சுழன்று ஆடுகின்றன 
இலைகள் 

தலைகீழாய்த் தொங்கி
ஊஞ்சலாடி மகிழ்கின்றன 
விழுதுகள் 

விசும்பின் வர்ணத்தைப்போல் 
வெளியெங்கும் 
தலையசைத்தாட்டி 
பசுமையால் 
கோடரிகளை வரவேற்று 
வீழ்கின்றன மரங்கள் 

கோபக் கோடரியில்
துன்பச் சூறாவளியில்
இன்னல் பேய்மழையில்
புவியெங்கும் வீழும்
மரங்கள்
மீண்டும் மீண்டும்
உயிர்தரித்து சிறகசைக்கின்றன
ஒவ்வொரு மரத்தினடியிலும்
உறங்காது காக்கும்
வேர்கள்!

துயரக் கழுகுகள் தீண்டாதபடி
உறவெனும்
சிறகுகளின் கூட்டுக்குள்
இலைகளும் விழுதுகளும்
கோழிக்குஞ்சுகளாய் !

இளசை கிருஷ்ணமூர்த்தி

உறவுகள் சுதந்திரச் சிறகுகள் 

தீவுகளாய் மாறிப்போன 
சமூகத்தில் 
தோப்பைப் பற்றிய கவலை 
அர்த்தமற்றது 

பரஸ்பர எதிர்பார்புகளுடனேயே 
உறவுகளின் 
ஊசலாட்டம் 

பழைய நியதிகளில் 
புதிய தலைமுறையை 
பயனிக்கச்சொல்ல
விலங்கிடப்பட்டதாய்
சுதந்திரத்தைபற்றிய
சிந்தனைகள் 

வேர்களைப்பற்றி 
அக்கறைகொள்ளாத விழுதுகள் 

விழுதுகளுக்கு நீர்தர மறுக்கும் 
வேர்கள் !

உறவு மரம் 
காட்சிப்பொருளாய்

மரங்களை ஓட்டுவதற்கு 
பெவிகால் இருக்க 
மனங்கள் தாமரை இலைமேல் 
நீர்போல 

மூன்று படுக்கையறை 
பளபளக்கும் தரை 
குளிர்சாதனவசதி
வென்நீருக்கும்,நன்நீருக்கும் 
கருவிகள் 
வடிவான மேசை நாற்காலிகள் 
அழகாய் இருந்தது வீடு 
உயிர்ப்பு இல்லாத காற்றோடு 
வெற்றிடமாய் ...
வளசைபோதலாய் 
வேறுநாடு சென்றவர்கள் 
அங்கேயே தங்கிவிட 
தாய்ப்பறவையின் தவிப்பு 

கலாச்சாரமாற்றத்தில் 
காணமல் போனது 
உறவுகளின் உன்னதம் 

Sunday, August 7, 2011

கவிஞர் கழுகுமலை ஸ்ரீகாந்த்

உராய்தளுக்கும் உயவுகளுக்கும்
உட்பட்டது உறவு.

முத்தப்பர் எனச் சொல்லி
முன்னவர்,
பின்னவர் சிறகுகள் ஒடிப்பின்
வெப்ப நாடிகள் முன்னவர்
வெளித் தோல்களைச்
வடுவாய் மாறிச் சுடும்.

நான்கு பேர் மத்தியில்
நாற்காலியில் அமரக் கூட
சுய சிறகுகள் இழந்து
சுருதியற்ற கூடுகள் போடும்
கோலங்கள் தேவையா?

விட்டொழிப்பாய் நண்பனே,

தமிழ்,

தலைவர்களை நம்பி
தலை கவிழ்ந்ததில்லை

வெட்ட வெட்ட முளைக்கும்
உனது சிறகுகள் – தமிழுக்காய்
அவை சட சடவென, பட படவென
அண்ட வெளிதனில் பறக்கட்டும்.

தோழனே,

நம் மொழி
மெல்ல மெல்லச்
செத்திடச் செத்திடச்
செய்வோர் முன்
சேவகம் புரிந்திடுமோ?

ஒராயிரம் ஆதவனில்
ஒன்றைப் பற்றிக் கொண்டோர்
அகண்ட வெளிதனில்
அகிலத்தினை வென்றதாய்
திளைத்திருந்தால் – அவர்தம்
விட்டத்துப் பூனையும்
எலியின்றிச் சாகும்
வெற்று நிலையும்
வெகு தூரத்தில் இல்லை
என உணர்வார்.

உறவின் சிறகுகள்
சுதந்திரம் தந்ததில்லை
வெட்டித் தொலைப்பாய்
அதை நீ.

இறகினும் மெலிதான தமிழ்
உன் சிறகினில் இணைத்து
அண்ட வெளிதனில்
ஆனந்தக் கூத்தாடுவாய்.

புறப்படு

உராய்தளுக்கும் உயவுகளுக்கும்
உனது உட்பட்டது உறவு.

உயவுகளின் தன்மை பெருக்கி
உராய்தல் களை ஒழித்திடுவாய்.

Saturday, July 16, 2011


கவிஞர் வாசல் வசந்தப்பிரியன்

              உண்மை தருமே நன்மை 
                                                            ( கவிஞர் வாசல் வசந்தப்பிரியன் )
தவறுதலாய் விட்டுச்சென்றான் பயணி தன  கைபையை -அதை
தனதாக்கிக்கொள்ள நினைக்காது -ஆட்டோ ஓட்டுனர்
உண்மையை சொல்லி ஒப்படைத்தார் காவல்நிலையத்தில் !
நன்மையாய் அவர் பெற்றார் பரிசும் நற்சான்றிதழும்

நிரபராதி நன்மை பெற வேண்டும் என்பதற்க்காகத்தான்
சாட்சிக்கூண்டில் ஏறும் சகல மனிதர்களும் சொல்கின்றார்
"நன் சொல்வதெல்லாம் உண்மை ,உண்மைதவிர வேறில்லை !"
என்கிற சத்தியப்பிரமாணத்தை நீதிபதியின் முன்னிலையில் !

முயல் அன்று ஆமையிடம் தோற்றதென்னவோ உண்மைதான்
விளைவு ...?இன்றும் முயல் கூட்டமோ
பாய்ந்து பாய்ந்து செல்லும் சுறுசுறுப்பு நன்மையன்றோ !

பொட்டு வைத்துக்கொண்ட விரல் பொத்தானை அமுக்கியது உண்மைதான் !
நிறைவேறும் வாக்குறுதிகளை -விரல்விட்டு எண்ணிக்கொண்டிருப்பது நன்மைதான் !

அதிவேகமாய் ஓடிவந்து - பந்து வீசுவது -உண்மைதான் !
அதுவே 'நோ பால்' ஆகும் போது ஆட்டக்காரருக்கு அது நன்மைதான் !

கவிதை எழுதும்போது காகிதங்கள் கிழிபடுவது உண்மை !
கனியொத்த கவிதை உருவாகி இனித்திடுமே அது நன்மை !

மண்ணைக் கீறிக்கொண்டு விதை வெளிப்படுவது உண்மை !
விண்ணோக்கி அது விருட்ச்சமாய் வளர்வதுதான் நன்மை !

வீணையின் நரம்புகளில் விரல்களின் விளையாட்டு உண்மை !
விதம் விதமாய் அதில் நாதம் பிறக்கிறதே அது நன்மை !

மணவறையில் அமர்வதுவோ மறுக்கவொண்ணா உண்மை !
மனமொத்த தாம்பத்தியம் மறுக்கவொண்ண நன்மை !

ஓட்டையுடன் புல்லாங்குழல் உருவாவது உண்மை
பட்டை அது  இசைக்கையிலே உணர்த்திடலாம் நன்மை !

வாசலிலே படிக்கின்ற கவிதையாவும் உண்மை
வாசமிகு நறுமலராய் மனம் வீசும் நன்மை !

நாக்கிற்கு போடப்பட்ட பொன்னாடையே உண்மை
நாக்கு உதிர்க்கின்ற நற்சொல்லே நன்மை !

அடைகாக்கும் தேனீக்கள் கூட்டமே உண்மை -கூடு
உடைபட்டால் வழிகின்ற தேனன்றோ நன்மை !

சொல்லுக்கு உண்மையே கிரீடம் சூட்டும்
எல்லாமே நன்மையை எளிதில் கூட்டும் !

Tuesday, July 5, 2011

கவிநயச் செல்வர் மன்னை பாசந்தி



கவிஞர்.வெ.அரங்கராசன்.

உண்மை தருமே நன்மை 



                 உண்மை தருமே நன்மை-அந்த
                 உண்மை உண்மை யாக இருந்தால்....
                 உண்மை பொய்ம்மைக் குப்பின் நின்றால்
                 உண்மை தருமா நன்மை?அது சிறுமை.....

                 உண்மை யிடத்தில் கண்மை
                          உண்மை யானால்
                 உண்மை தருமே நன்மை....
                          உண்டுஅங்கு நன்மை.....

                 ஒண்மை தண்மை திண்மை யாவும்
                 உண்மை யிடத்தில் உண்மை யானால்
                 உண்மை தருமே நன்மைஅது இனிமை....
                 உண்மை வெறுமை யானால்அது இன்மை.....
        
                 உண்மை அண்மைத் தன்மை கொண்டால்
                 உண்மை தருமே நன்மைஅது முதன்மை.....
                 உண்மை வெண்மைத் தன்மை கொண்டால்
                 உண்மை தரும்அந் நன்மைஅது புன்மை....
                
                 உண்மை தரும்பல நன்மை....அவை
                          கழுத்தில் கட்டிய தாலி....
                 பொய்ம்மை தரும்பல நன்மை....அவை
                          முட்டியில் கட்டிய தாலி......  

                 உண்மை உறங்கும் ஒருபோதும்
                          உயிரை உதிர்க்காது....
                 பொய்ம்மை பேயாட்டம் போடும்.....
                          ஒருநாள் ஓடும்...

                 உண்மை இமயம் நிரந்தரம்,,,,,
                 உண்மை பெருமை அருமை....
                 உண்மை உயர்வரம் உயிர்அறம்....
                 உண்மை தருநன்மை வலிமை.....
________________________________________________________________________

 கண்மை=கண்ணோட்டம், வண்மை=வளமை,
 ஒண்மை=அறிவு, தண்மை=நற்பண்பு,
 எண்மை=எளிமை, வெண்மை=அறிவின்மை, புன்மை=இழிவு.