வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Friday, January 14, 2011

பூரிப்போம் புத்தாண்டில்

பூரிப்போம் புத்தாண்டில்

வரலாற்றை பதிவு செய்யும்
வண்ண நாயகியின் பிறந்த நாள்
ஆகையால்
உரக்க கூச்சலிடு
உன்னதமாய் பாட்டுப் பாடு
ஊர்முளுக்கப் பறை கொட்டு

தீயோர்க்கு தீயவை தந்து
எடுத்துவைத்த அடி எல்லாம்
ஏழ்மையை விரட்டுது என்று

விடிகின்ற புதுநாள் எமக்கோர்
விடுதலை தரும் என்றும்
உரக்க கூச்சலிடு !
இரவெல்லாம் விடியலுக்கே
இடரெல்லாம் மகிழ்ச்சிக்கே
எனச் சொல்லி
வந்தனைக்கும் காலச் சுவடு பதித்திடவே
உன்னத பாட்டுப் பாடு !!

போனது போகட்டும் இன்று
புதிதாய் நாம் பிறந்தோம் இனி
புதியதோர் விதி சமைப்போம் என
ஊர்முளுக்கப் பறை கொட்டு !!

வேதனைகள் புறந்தள்ளி
சாதனைகள் ஏற்றுக் கொள்வோம்
நாயகின் பிறந்தநாள்
போற்றுவோம் புத்தாண்டன்று

கவிஞர் கழுகுமலை இல. ஸ்ரீகாந்த்

Friday, January 7, 2011

வாசல் வசந்தப்பிரியன் ,தலைவர், வாசல் கவிதை அமைப்பு

 கொத்து வெள்ளைப் பூச்சூடி
புத்தாண்டு நாள்காட்டி !
மொட்டையான அட்டையுடன்
முடிந்து விட்ட நாள்காட்டி
ஏகத்தாளமாய் ...
தனைப்பார்த்த புதுசிடம்
எடுத்துரைக்கத் தொடங்கியது பழசு ...
சென்ற ஆண்டின் தொடக்கத்தில்
உனைப்போல நானிருந்தேன்
இந்த ஆண்டு முடிகையிலே ...
என் நிலைதான் உந்தனுக்கும்!
கிழி கிழி என்று தினம் கிழிக்கும் மனிதர்களை
விழி பிதுங்கப் பார்பதன்றி
வேறு வழி இதற்கில்லை !

பண்ணிரண்டு கட்சிக் கூட்டணியுடன் சுவற்றில்
பவ்யமாய் படபடத்தது பதினோராம் வருட  மாதக் காலன்டர்
ஜனவரியில் கூட்டணி ,டிசம்பரில் தனித்துப் போட்டி
வரிசையில் நிற்கப்போவதை நினைத்து
வாக்களருக்குப் பூரிப்பு!
வெற்றிச் செய்தியில்
வேட்பாளருக்கு பூரிப்பு !
டெபொசிட் தப்பித்தால் பலருக்குப் பூரிப்பு
கருத்துக்கணிப்பு பலித்தால் மீடியாவுக்கு பூரிப்பு
அமைச்சர் பெயர் அறிவிப்பில்
அதிகாரிகளுக்குப் பூரிப்பு !
விண்ணில் ஏவப்பட்டு பாதியில்
விழாமல் இருந்தால்
விஞ்ஞானிகளுக்கு அளவற்ற பூரிப்பு
புத்தாண்டில் பூரிப்பு !
என்னென்ன எதிர்பார்ப்பு


Wednesday, January 5, 2011

-கவிமாமணி குமரி செழியன் கவிதை

புத்தாண்டு பிறபென்றால்புதிய எண்ணம்
       புறப்பட்டுக் கால்கொள்ளும் பருவகாலம்
வித்தாகபப் புதையுண்ட விருட்ச நாற்று
       வானோக்கி  உ யர்கின்ற உறவுக்கோலம்
பத்தான விரலுக்குள் உழைப்பின் வேகம்
        புதியஉரம் கொள்கின்ற அழைப்பின் தாகம்
சொத்தாக நல்லெண்ணம் ஒழுக்கம் வாய்மைச்
        சுடரேந்தி இமயத்தை சுருட்டிப் போடும் !

வசந்தங்கள் பூபெய்த வேம்பு பூக்கும்
       வாசல்கள் திறந்தெங்கும் நேசம் வீசும்
கசப்பெல்லாம் இனிப்பக்கிக் கவலை மாற்றும்
         கட்டுண்ட பாசங்கள் வாசம் தேக்கும்
பசப்புக்கள் இல்லாத வாழ்க்கை  யாலே
        பன்னீர்ப்பூ சொரிகின்ற பாதைதோன்றும்
பசுமைக்கு வரவேற்புப் போர்வை சூட்டி
        பூரிப்போம் புத்தாண்டில் ! புகழே மிஞ்சும் !


 

கவிஞர் கவிமாமணி வாசல் எழிலன்- கவிதை

பருவ மழை தவறவில்லை ; பாடுபடும் நல்ல
       பாட்டாளி மக்களுக்கோ குறைவில்லை, நாளும்
வறுமையில்லை வெல்லுகின்ற ஆற்றலுக்கோ  இங்கே
       வாழுகின்ற நம்மிடமே குறைவில்லை.என்றும்
பெருமையினை கொண்டிருக்கும் நாடென்றே எங்கும்
       பீடுநடை  போடுவதில் குறைவில்லை.போற்றும்
 பொறுமையினால் பெற்றவராய் வாழ்ந்திருக்க இங்கே
        பூரிப்பே நிறைந்திருக்கும்  புத்தாண்டில் தானே!

விலைவாசி வானத்தை முட்டினாலும் சாதி
        வீட்ட்ருமைகள் எங்கெங்கு நிறைந்தாலும் நீண்ட
மலையோலே ஊதியங்கள் வருவதாலே நாமும்
        மகிழ்ச்சியிலே மக்களெல்லாம் இருக்கின்றார் நாடி
வலைவீசித் தேடுகிறார் நகைக்கடையை பல்லோர்
        வாழுகின்றார் ஆடம்பரத்தில் குறைவின்றி காயும்
நிலையில்லாம் நிறைவாக மாறியதால் மக்கள்
           நெஞ்சமெல்லாம் பூரிக்குதே புத்தாண்டில் ஒன்றாய்!

Tuesday, January 4, 2011

"கவிநயச் செல்வர் "மன்னை பாசந்தி

கவிமாமணி எதிரொலி விசுவநாதன்

  டிசம்பர் மாதம் பாரதி பிறந்தார் 
ஜனவரி மாதம் புத்தாண்டு 
பாரதி பிறந்த பின்னால் அன்றோ 
பைய வந்தது புத்தாண்டு 
கூண்டுப் பறவை விடுதலை யாகி 
கூவிவானில் பறப்பதுபோல் 
வீட்டு சிறைக்குள் கிடந்த பெண்கள் 
விடுதலை ஆனது யாராலே 
பாரதி பிறந்த பின்னால் அன்றோ 
பாவயருக்கு புத்தாண்டு 
பார்பனனாக பிறந்ததாலே 
பாரதிக்கில்லை புத்தாண்டு 
-எதிரொலி விசுவநாதன் 
044 - 22420451 

Monday, January 3, 2011

கவிஞர்.இரா.கணேஷ்

இந்தியா
விவசாய நாடு
தியாகிகளின் ரத்தத்தில்
பூரிப்பாய் விவசாயம்

ஊழல் உரமாகிறது

இருப்பினும்
பூரிப்பிற்கு குறைவில்லை
கவலை வேண்டாம்

விஷத்திலிருந்து நோய் முறிக்கும்
மருந்து கண்டதுபோல
விடிவு வரும்...  எதற்கும்.....

நம் பூரிப்புமாறாமல்
வரும் காலத்தை கொண்டாடுவோம்
இந்த புத்தாண்டையும் சேர்த்து ..

02/01/2011 பூரிப்போம் புத்தாண்டில் - இளசை கிருஷ்ணமூர்த்தி

ஒற்றை பனைமரநிழலில்
ஓராயிரம் கனவுகளுடன்
நித்தம் பசியாற
நீளும் கைகள்
விழியில் எதிர்பார்ப்புடன்
விடியலை தரவரும்
ரட்சகனுக்காய் காத்திருக்கும்

எத்தனையோ பத்தாண்டு
ஏமாற்றிப்  போனாலும்
இந்தப் பத்தாண்டு
இன்பத்தை தருமென்று
நம்பிக்கை நாற்றுக்களை நட்டுவைப்போம்

இலவசப் புயல் அடிக்காமல்
ஊழல் வெள்ளம் சிதைக்காமல்
பயிர் வளர வழிசெய்வோம்

பொழுதெல்லாம் நம் செல்வம்
அந்நியர்
கொள்ளைகொண்டு போகாமல்
கொள்கை செய்வோம்

நாளை வரும் காலம்
நமக்காக மலருமென்று
பூரிப்போம் புத்தாண்டில்

இளசை கிருஷ்ணமூர்த்தி

Sunday, January 2, 2011

புத்தாண்டில் பூரிப்போம் கவிதைகள் பதிவு

இல.சைலபதி வாசித்தளித்த கவிதை

 
புத்தாண்டில் பூரிப்ப்போம்

கொண்டாட்டங்கள் கொடிகட்டிப்பறந்த
இரண்டு தினங்களைக் கடந்து
நாளை வேலை நாள்

பரபரப்பு,பறக்கும்வேகத்தில் பயணம்
என எல்லாமே மாறிப்போகும்

வாழ்த்துகளும்
குவிந்த குறுஞ்செய்திகளும்
உலர்ந்து போவதற்கு முன்பே
குறுக்கிடலாம் வாழ்வின் நிஜங்கள்

கடந்த காலங்கள் சொல்லும்
என் தன் வரலாறு
நினைவுப்படுத்தும் -
முதுகுப்படிக்கட்டில் ஏறி
சிம்மாசனம் சேர்ந்தவர்களுக்கு
எதிரான என் கலகக் குரல்
ஓசையின்றி ஒலித்ததை

கேட்டு வாங்கியோ
அல்லது
வந்து சேர்ந்ததுவோ ஆன
சாமி படம்போட்ட
நாட்காட்டியில் நாட்கள் தீர்ந்து போன பின்பு
தூக்கியெறிய மனம் இன்றி
பரணில் சேர்த்த
பழைமை வாசனையாய்
கொண்டாட்ட நினைவுகள்

மாற்றங்களை மனதில் வைத்துதான்
கொண்டாட்டங்கள்

மனமோ, சமூகமோ
மாற்றங்களற்றதாக
மாறிபோனால் - கொண்டாட்டங்களோ
நிரந்தர வெளிச்சம் தேடியவனுக்கு
பட்டாசு வெளிச்சத்தை
பரிசளித்தது போலப்போகும்

ஆனாலும்
இன்று நண்பன்கொண்டு தந்த
நாட்காடியைக்கண்டு வியந்தபடியே
மனைவியிடம் கூறினேன்
"பாருடி இந்த வருஷம் பெருமாளே வந்திட்டார் வீட்டிற்கு"
என்று பூரித்துப்போனேன் இயல்பாக ....
- இல.சைலபதி