வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Sunday, October 2, 2011

மக்கள் மனதில் மகாத்மா - இல.சைலபதி

 
காந்தி
போர்பந்தரில் பிறந்த புத்தன்

மனதை மட்டுமல்ல
மக்களையும் வென்ற மகாவீரன்
சத்தியச்சிலுவையில்
தன்னைத்தானே அறைந்துகொண்டு
செத்த இயேசு

ஆயுதமேந்தாமலேயே
சுந்ததிரப்போரை நடத்திமுடித்த
பாரதச்சாரதி

பதவித்துண்டை
ஒரு நாளும் நாடாத
அரை நிர்வாணப்பக்கிரி

காந்தி...
ஆயுதங்களை ஏந்தி
அணிவகுத்தவர்களுக்கு முன்பு
அன்பை ஏந்தி
அமைதிப்போர் செய்தவன்

கொன்று குவித்தால்தான்
வெற்றி என்று
நினைத்த உலகத்திற்கு
அன்பால் வென்று
நிலைக்கக் கற்றுத்தந்தவன்

காந்தி
இந்திய அரசியலின் பொற்காலம்
மக்களுக்கு நல்ல தலைவர்கள்
கிடைத்திருந்த  நற்காலம்

அந்தக் காலத்து அகராதி
தலைமை என்பதற்கு
எளிமை என்று பொருள் சொன்னது


சாகும் போது சட்டைப்பையில் 
வெறும் அறுபது ரூபாயோடு
ஒரு மாபெரும்தலைவன்
மரித்துபோவதெல்லாம்
அந்தக் காலத்தின் அதிசயம்
 

காந்தியின்
கொள்கைக் கோவணத்தை
உருவித் தங்கள்
கட்சிகளுக்குக்
கொடிசெய்து கொண்டனர்
தற்காலத் தலைவர்கள்

ஊரெங்கும் அவருக்குச் சிலை
ஆனால்
ஒரு தலைவன் நெஞ்சில்கூட
அவருக்கு ஊசிமுனை இடம் இல்லை

மாளிகை வாசத்திற்குப்
பழக்கப்படுத்திக்கொண்ட
அம்பானிகளின் அடிவருடிகளுக்கு
அவர் ஆசிரமவாசமும்
அரிச்சந்திரபுராணமும்
அர்த்தமற்றவை

அவர்
நெஞ்சில் முதல்
குண்டு பாய்ந்தபோது
மண்ணில் ஊழல் விதை
விழுந்தது

இரண்டாவது
குண்டு பாய்ந்தபோது
பொதுநலம் மறந்த தலைமைகள்
பிறந்தது.

மூன்றாவது
குண்டு பாய்ந்தபோது
மதவாதம் ஒரு சாபமாகி
பாரத மண்ணின்
நீங்காத நிழலானது

காந்தி
உலகவரலாற்றில்  போட்ட
சத்தியத்தின் நெடுஞ்சாலை
யாரும் புழங்குவாரற்று
புழுதிபடிந்து கிடக்கிறது

வாருங்கள் நமக்கான
பயணங்களை அந்தச்
சத்தியச்சாலையில்
சமைத்துப்பார்ப்போம்