வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Thursday, December 29, 2011


புத்தாண்டு வாழ்த்துக்கள்


பத்தோடு பதினொன்றாய் போகாமல் 

வித்தாக விடியட்டும்  புத்தாண்டு !
முத்தான முயற்சியெல்லாம் வெற்றிபெற 
புத்துணர்வு தரட்டும் இப்புத்தாண்டு  !



  வாசல் வசந்தப்ரியனின் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் 

Monday, December 5, 2011

இல.சைலபதி கவிதை


பாரத விடியலில் பாரதி
  
  • பாரதி
    அடிமைச்சுமையைப் புரட்ட
    பாட்டு நெம்புகோல்
    எடுத்தவன்

    காலவெள்ளத்தில்
    மூழ்கிக்கொண்டிருந்த தமிழ்க்கவிதையை
    புதுவிசையோடு பாய்ந்து
    மீட்டெடுத்த முண்டாசுக்கவி

    நூற்றாண்டுப்புழுக்கத்தில்
    இருந்த
    பாரத மக்களுக்கு
    பாட்டு சன்னல்களைத் திறந்து
    சுதந்திரக்காற்றைச் சுவாசிக்கத் தந்தவன்

    பாரதி
    காந்தியின் மொழிபெயர்ப்பு
    நேதாஜியின் மறுபதிப்பு

      

    பாரதி
    அதுவரைக்
    கருவறைகளில் இருந்த
    கடவுளர்களைத் தன்
    கவியறைகளுக்குள் கொண்டுவந்தவன்

    அவன் திருப்பள்ளியெழுச்சி
    பாடியது
    தெய்வங்களுக்காக அல்ல
    பக்தர்களுக்காக

    அவனுக்கும்
    கண்ணனுக்கும் இடையே
    சாத்திரங்கள் இல்லை
    சங்கமம் இருந்தது

    அவனுக்கும்
    காளிக்கும் இடையே இருந்தது
    அச்சம் அல்ல
    அன்பு மட்டுமே

    பாரதி
    கடைசிவரைக்கும் தந்த
    கவிதைஅவலைத் தின்று விட்டு
    மாற்றுத்தராமல்
    மாதவனால் கைவிடப்பட்ட சுதாமன்

    காலத்தோடு சமரசம்
    செய்துகொள்ளத்தெரியாத
    அரை சமத்தன்

    வறுமை
    அவன் அமர்ந்திருந்த
    ஓட்டைப்பாயையும் உருவிக்கொண்டது
    அவனோ
    சாத்திரங்களைக் கலைத்துப்போட்டுத்
    தனக்குச்
    சிம்மாசனம் செய்துகொண்டான்

    கடவுளர்கள் மட்டுமா
    கைவிட்டது அவனை ? 

    தமிழ்ச் சமூகம்
    அவனுக்கு அன்று
    தர மறுத்த
    கௌரவம் குறித்த இன்றும்
    பரம்பரை பரம்பரையாய்
    குற்ற உணர்ச்சியோடு வாழ்கிறது


    அதற்குப் பரிகாரமாகத்தான்
    கவிதை
    என்று இன்று
    யார் என்ன எழுதினாலும்
    கவிஞன் என்று சொல்லி
    எழுந்து நின்று கைதட்டுகிறது

    எனக்கான
    கவிஞன் பட்டமும்
    பாரதியின் அவமானத்தில்
    பயிரானதுதான் 

    குருடர்கள்
    யானையைத் தடவிப்பார்த்துச்
    சொன்னது போலத்தான் பாரதியை
    பாரதம் அறிந்திருக்கிறது

    அறிவுக் கண்திறந்து பார்ப்போம்
    கவிதையானை ஒன்று காலங்கடந்து
    நமக்காகக் காத்துநிற்கிறது
    தன் திரண்ட நம்பிக்கையோடு