வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Thursday, January 19, 2012

கழுகுமலை ஸ்ரீகாந்த்

கழுகுமலை ஸ்ரீகாந்த்

மரணித்து மீண்டும் மீண்டும் ஜனிப்பதால்
மரணத்தை மறந்து போகச் செய்தவனே.,
கருவறை இருட்டினில் விடியலின் வெள்ளியே.,
குத்தீட்டிக் குளிரில் வெம்மையாய் வருவாய்.

கிரணத்துக் கீற்றாய் பிரபஞ்சத்தில் படர்ந்து
கிடந்த ஜடங்களை உயிர்ப்பிக்க வைத்தவனே
நிரந்தர கர்பத்தில் தாய்மையின் வடிவே.,
குழவிக்கு மழலையாய் கொஞ்சியே வருவாய்.,

ஆற்று வெள்ளத்தை அணை கட்டி
ஆனந்த நெல்மணிகள் அருளிச் செய்தவனே
நிறைந்த வயிற்றில் உதித்த சிரிப்பே
தமிழன் உண்டிட முல்லையாய் வருவாய்.,

கற்கள் உரசி கடும்தீ மூட்டி
கற்கால வெளிச்சம் கனிவாய் தந்தவனே
அற்புத உலகின் அரும் படைப்பே
அணு உலையைப் காத்திட நீ வருவாய்.,

கேட்கும் கல்வி செல்வம் சேர்த்து
கேளா தீய குணங்கள் ஒழித்து
முன்னை வினைகள் முற்றம் அழித்து
முடிவிலி இன்பமாய் நீ வருவாய்.,,

வருக புத்தாண்டே வருக.,,,

Tuesday, January 10, 2012

தலைமைக் கவிதை


வாசல் கவியரங்கம் 129

    01.01.2012

தலைமை: மதுரை பாபாராஜ்
=======================================
வாசலுக்கு வாழ்த்து
=======================================
ஆண்டின் தொடக்கமே வாசல் கவியரங்கம்!
ஆண்டின் முதல் நாளே வாசலில் பாமழை!
ஆண்டு முழுவதும் வாழ்வில் வளம்சேரும்!
தூண்டுகோல் வாசல்தான் சொல்.

விளக்கு ஒளிர்வதற்கும் தூண்டுகோல் உண்டு!
களத்தில் படைநடத்தத் தூண்டுகோல் உண்டு!
தரமாய்க் கவிபடைக்கத் தூண்டுகோலாய் வாசல்
அரங்கம் என்றென்றும் உண்டு.

வாசல் வசந்தப் பிரியனும் அன்னாரின்
நேசமிகு இல்லாளும் சேர்ந்து இலக்கிய
வாசலில் மங்களத்தைச் சேர்க்கின்ற சேவையை
மாசின்றிச் செய்கின்றார் பார்.

புரவலர்களுக்கு வணக்கம்!
=========================
முப்பத் திரண்டு புரவலர்கள்  ஆர்வத்தில்
 எப்பொழுதும் இந்தத் தமிழ்ச்சங்க வாசலில்
முத்துத் தமிழ்க்கவிதை வற்றா நதியாக
நற்றமிழில் ஊற்றெடுக்கும் பார்.

பாடும் பறவைகளே வருக! கவிதை தருக!
========================================
கூடிக் கலைகின்ற காகங்கள் நாங்களல்ல
கூடிப் பொழிகின்ற மேகங்கள் நாங்களென்று
பாடிக்  கவிபொழிய  நாடிவந்தார் பாவலர்கள்!
கோடி வணக்கங்கள் கூறு.

தலைப்பைக் கொடுத்துவிட்டால் தமிழ்ச்சொற்கள் நாடிவரும்!
தமிழ்க்கவிதை தொடுத்துவிட்டால் மனங்குளிரும்! மெய்சிலிர்க்கும்!
அனல்கவிதை வாசித்தால் அரங்கில் அனல்பறகும்!
புனல் கவிதை வாசித்தால் சூழ்நிலையோ மெய்மறக்கும்!
எங்கள் கவிஞ்ர்கள் எதைக்கொண்டுவந்தார்?
கேட்போமா? கேட்டு ரசிப்போமா?

வருகை தந்துள்ள அனைவருக்கும்
===================================
வீட்டிலும் நாட்டிலும் எண்ணற்ற வேலைகள்
ஆட்டிப் படைத்தாலும் எங்கள் நிகழ்ச்சிகளைக்
கேட்டு ரசிப்பதற்கு வந்திருக்கும் உங்களைப்
பாத்தமிழால் வாழ்துகின்றோம் இன்று.

தலைமைக் கவிதை!
=======================
கூடங் குளமும் பெரியாறு சிக்கலும்
பாடாய்ப் படுத்தவைக்கும் ஆண்டை முடித்தேதான்
சோதனையைச் சாதனையாய் மாற்றவரும் புத்தாண்டை
ஆசையுடன் வாழ்துகின்றோம் இன்று.

மீனவர் சிக்கலைத் தீர்க்கவேண்டும்! ஊழலென்னும்
ஈனத்தைப் போக்கவேண்டும்! நாளும் விலைவாசி
வான்முட்டும் போக்கைத் தடுத்துக் குறைக்கவேண்டும்!
ஊனமனத் தீவிர வாதம் அழியவேண்டும்!
பாணம் தொடுக்கவேண்டும் நீ.

குப்பை உணவுகளை நம்குழந்தை உண்பதற்குக்
கொட்டிவைத்து விற்கின்றார்! அம்மா! உயிருடன் 
நாட்டில் விளையாடும் கேவலத்தை, புத்தாண்டே!
ஈட்டிமுனை யாகித்தான் தாக்கு.

சென்னை நகரெங்கும் குப்பைக் குவியல்கள்!
வந்துசென்ற மாமழையால் சலையெல்லாம் பள்ளங்கள்!
எங்கெங்கும் துர்நாற்றம்! மூகைப் பிடித்தேதான்
நம்மக்கள் ஓடுகின்றார் பார்.

துள்ளி விளையாடும் பள்ளிப் பருவத்தில்
அள்ளிச் சுமக்கின்றார் புத்தக மூட்டையை!
தள்ளாடிச் சாய்ந்தே நடக்கின்ற கோலமோ
சொல்லொண்ணாத் துன்பந்தான் சொல்.

இப்படித்தான் எண்ணற்ற சிக்கலிலே மக்கள்தான்
தப்பிப் பிழைக்கின்றார்! எங்களைக் காத்தருள
அக்கறையாய்க் கூடிநின்று பாடுகின்றோம்! புத்தாண்டே!
வெற்றிக்கு வித்திட்டு வா.